பாலியல் வன்கொடுமைக்கு செல்போன்கள்தான் காரணம் என்ற கர்நாடக சட்டப் பேரவை குழுவின் முடிவுக்கு தமிழக கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளில் செல்போன்களை பயன்படுத்துவதே பாலியல் வன்முறை அதிகரிக்க காரணம் என்று கர்நாடக சட்டப்பேரவையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல குழு குற்றம்சாட்டியுள்ளது. எனவே, கல்விக் கூடங்களில் செல்போன்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இந்த கருத்துக்கு தமிழக கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொது பள்ளிக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது, ‘‘எப்போதெல்லாம் பெண்கள் தங்களை வலுப்படுத்திக் கொண்டு, சுதந்திரமாக செயல்பட முயற்சிக்கிறார்களோ அப்போதெல்லாம் இதுபோன்ற வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன.
பெண்கள் ஏதாவது ஆபத்தில் சிக்கினால், அவர்கள் உடனடியாக அந்தத் தகவலை பிறருக்கு சொல்ல உதவுவது செல்போன்தான். அதை தடை செய்வது என்பது அபத்தமானது. வகுப்பறையில் செல்போனை பயன்படுத்தாமல் தவிர்க்க வேறு வழிகளை கடைபிடிக்கலாம்” என்றார்.
‘‘பெண்களுக்கான சமூக பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதன் வெளிப்பாடுதான் இத்தகைய உத்தரவுகள். ஆபத்தில் இருக்கும் பெண்கள், செல்போனில் ஒரு பட்டனை அழுத்தினால் உதவிக்கு பத்து பேரை ஒரே நேரத்தில் அழைக்கும் வசதிகள் உள்ளன. பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு காரணம், பெண்களை மதிக்கும் ஆண்கள் இல்லாததுதான்.
அப்படியொரு சமூகத்தை உருவாக்குவது கடினம் என்பதால், பெண்களின் உடை, செல்போன்கள் மீது கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. வீடுகளிலேயே பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்களே, அப்போது என்ன செய்வது’’ என்று கேள்வி எழுப்புகிறார் கல்வியாளர் அருணா ரத்னம்.