கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு பாமக அழைப்பு விடுத்திருந்த நிலையில், அம்மாவட்டத்தில் 7 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து இன்று(மார்ச்.11) முழு அடைப்புப் போராட்டத்திற்கு பாமக அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து, கடலூர், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, வடலூர், நெய்வேலி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்பட மாவட்டம் முழுவதும் 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஐஜி கண்ணன் தலைமையில் டிஐஜிக்கள் விழுப்புரம் பாண்டியன், காஞ்சிபுரம் பகலவன் மற்றும் 10 எஸ்பிகள் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. கடலூர், சிதம்பரம், வடலூர், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் கடைகள் திறந்திருந்திருந்தன.
குறிஞ்சிப்பாடியில் காலையில் கடைகள் அடைக்கப்பட்டு மதியம் திறக்கப்பட்டன. விருத்தாசலத்தில் காலை கடைகள் அடைக்கப்பட்டிருந்தது, மதியம் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடியில் கடைகளை அடைக்குபடி கூறிய 30 பாமகவினரை போலீஸார் கைது செய்னர்.
சேத்தியாத்தோப்பு பகுதியில் பாதிகடைகள் திறக்கப்பட்டுள்ளன. மீதி கடைகள் மூடப்பட்டுள்ளன. கடலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக மாவட்ட செயலாளர் சண் முத்துகிருஷ்ணன் தலைமையில் 100 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.