காரைக்குடி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதியின்றி தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்த மாணவர். 
தமிழகம்

காரைக்குடி அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் தரையில் படுக்க வைத்து சிகிச்சை: மருத்துவர்கள் தாமதமாக வந்ததாக புகார்

செய்திப்பிரிவு

காரைக்குடி: காரைக்குடி அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தோரை தரையில் படுக்க வைத்த அவலநிலை ஏற்பட்டது. சிகிச்சை அளிக்க மருத்துவர் தாமதமாக வந்ததாக புகார் கூறப்படுகிறது.

காரைக்குடி அரசு போக்கு வரத்துக் கழக பணிமனை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஹரீஷ், நவீன், விஜய், பள்ளி மாணவர் நாச்சியப்பன் ஆகிய 4 பேர் காயமடைந்தனர்.

அவர்களை அங்கிருந்தோர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால் அங்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு 2 படுக்கைகள் மட்டுமே உள்ளன.

இதனால் படுக்கையின்றி மற்றவர்களை தரையில் படுக்க வைத்தனர். மேலும் அந்த நேரத்தில் மருத்துவரும் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களே காயமடைந்த மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்துக்குப் பின்பு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வந்தனர். இதனால் அதிருப்தி அடைந்த நாச்சியப்பனின் உறவினர்கள், அவரை தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT