ராமேசுவரம்: தனுஷ்கோடியிலிருந்து அரிச்சல்முனை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடல் சீற்றம் காரணமாக தடுப்பு கற்கள் சாலையில் சிதறிக் கிடப்பதால் வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராமேசுவரத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் தனுஷ்கோடி, அதனையடுத்து 5 கி.மீ. தொலைவில் அரிச்சல் முனை உள்ளது.தனுஷ்கோடியைப் பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகளும், அரிச்சல்முனையில் புனித நீராட பக்தர்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான வாகனங்களில் தினந் தோறும் வந்து செல்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக தனுஷ்கோடியின் தெற்கே மன்னார் வளைகுடா கடற்பகுதி சீற்றமாகக் காணப்படுகிறது. இதனால் தனுஷ்கோடி-அரிச்சல்முனை தேசிய நெடுஞ்சாலையில் கடல் அரிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்பு கற்கள் சாலையில் சிதறிக் கிடக்கின்றன.
இதனால் தனுஷ்கோடிக்கு பைக், ஆட்டோ, கார் மற்றும் சுற்றுலா வாகனங்களில் வரும் மக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் சிதறிக் கிடக்கும் கற்களை உடனடியாக அகற்றி சாலையை முறையாக பராமரிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.