தமிழகம்

சென்ட்ரலுக்கு குண்டு மிரட்டல்: கால் டாக்ஸி ஓட்டுநரிடம் விசாரணை; மர்ம நபர்கள் சதித் திட்டமா?

செய்திப்பிரிவு

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீவிர சோதனைக்குப் பிறகு, குண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. தொலை பேசியில் தகவல் கூறிய கால் டாக்ஸி ஓட்டுநரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘‘சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த குண்டு மாலை 4 மணிக்கு வெடிக்கும்’’ என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

கடந்த மே 1-ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்து சுவாதி என்ற இளம்பெண் பலியானார். பலர் காயமடைந்தனர். இந்நிலையில், குண்டு மிரட்டல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த 6 ரயில்கள், வெளியூரில் இருந்து வந்த 2 ரயில்களில் மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ரயில்களில் வந்திறங்கிய மற்றும் ஏறுவதற்காகக் காத்திருந்த பயணிகளின் உடமைகள் அனைத் தும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.

இதில் சந்தேகப் படும் விதத்தில் எந்த பொருளும் சிக்கவில்லை. குண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிந்தது.

இதற்கிடையில், கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு குண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், வேளச்சேரியை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் சுடலை என்பவர் சிக்கினார். அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

‘‘டாக்ஸிக்கு பக்கத்தில் நின்றிருந்தேன். அப்போது, அருகே நின்று 3 பேர் பேசிக் கொண்டிருந்தனர். சென்ட்ரலுக்கு வரும் ரயிலில் நமது ஆட்கள் வைத்த வெடிகுண்டு மாலை 4 மணிக்கு வெடிக்கும். இதில் 10 பேராவது சாகவேண்டும் என்று அவர்கள் பேசிக்கொண்டனர். இதை கேட்டதும் பயந்துபோய் போலீஸுக்கு தெரிவித்தேன்’’ என்று அவர் கூறினார்.

அவர் சொல்வது உண்மையா? அப்படியென்றால் அந்த 3 பேர் யார்? என்று பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. சுடலையிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

SCROLL FOR NEXT