தமிழகம்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட முன்வரைவு: ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு தலைவர்கள் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம்இயற்றலாம் என்பது உள்பட 8கேள்விகளை ஆளுநர் எழுப்பியுள்ளார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட முன்வரைவை ஆளுநர்142 நாட்கள் கழித்து திருப்பிஅனுப்பியது கண்டனத்துக்குரியது. இந்த சட்ட முன்வரைவில் எந்த மாற்றமும் செய்யாமல் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன்படி ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரம் குறித்துவிவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: தமிழகத்தில் அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாவதை தடுக்காமல், இனியும் ஆளுநர் காலதாமதம் செய்தால் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ததற்கு இணையாக அமைந்துவிடும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: வலுவான ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அமலுக்கு வந்தால் மட்டுமே அநியாய உயிரிழப்புகள் தடுக்கப்படும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: தேர்வு செய்யப்பட்ட மக்களாட்சியை செயல்படவிடாமல், மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவிடாமல் தடுத்து வருவது கண்டனத்துக்குரியது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர்எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் அ.ராதிகா,எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், தமிழர்தேசிய முன்னணி தலைவர் செ.ப.முத்தமிழ்மணி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT