சென்னை: விதிமுறைகளை மீறி வாகன நம்பர்பிளேட்டுகளை தயாரித்து விற்பனை செய்ய வேண்டாம் என கடை உரிமையாளர்களுக்கு போக்குவரத்து போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி நம்பர் பிளேட்டுகளில் பதிவு எண்களை எழுதியிருக்க வேண்டும். ஆனால் பல வாகனஓட்டிகள் தங்களது விருப்பத்துக்கேற்ப நம்பர் பிளேட்டுகளில் படங்களை ஒட்டுதல், பலவித வடிவங்களில் எழுத்துகளைப் பதிவிடுதல் என பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த விதிமீறல்களைத் தடுக்கவும் வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடந்த பிப்.13-ம் தேதி போக்குவரத்து போலீஸார் சிறப்பு வாகன சோதனை மேற்கொண்டனர். மேலும் விதிமுறைகளை மீறி நம்பர் பிளேட்டுகள் வைத்திருந்த 6,170 வாகனங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதித்து, சரியான நம்பர் பிளேட்டுகளை பொருத்துமாறு அறிவுறுத்தினர்.
இந்நிலையில் சட்டவிதிகளுக்கு முரணாக விதிகளை மீறி வாகனநம்பர் பிளேட்டுகளை தயாரித்து விற்கும் கடைகளுக்கு போக்குவரத்து ஆய்வாளர்கள் நேரிடையாக சென்று ஆய்வு செய்து எச்சரித்தனர். நம்பர் பிளேட்டுகளுக்கான விதிமுறைகளை அவர்களிடம் எடுத்துக்கூறி அறிவுறுத்தினர்.
அந்த வகையில் சென்னையில் 138 வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்யும் கடைகளை போக்குவரத்து அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதேபோல் புதுப்பேட்டை போன்ற முக்கிய இடங்களில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் மூலம் தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.