சென்னை: சென்னை மாநகரில் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் சரிவர சேவை வழங்காமல், வரியை செலுத்துமாறு நோட்டீஸ் வழங்கி அச்சுறுத்துவதாக சென்னை குடிநீர் வாரியம் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஏறத்தாழ 426 சதுர கி.மீ. பரப்புகொண்ட சென்னை மாநகரம் 15 மண்டலங்களாகவும், 200 வார்டுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் குடிநீர் வழங்கும் சேவை, கழிவுநீர் அகற்றும் சேவையை சென்னை குடிநீர்வாரியம் மேற்கொண்டு வருகிறது. மாநகரில் மொத்தம் 12 லட்சத்து 68 ஆயிரத்து 132 சொத்து உரிமையாளர்கள் உள்ளனர்.
இவர்களிடமிருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவைக்கான வரி வசூலிக்கப்படுகிறது. மாநகரின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் பல இடங்களில் இந்த சேவைகள் கிடைக்காத இடங்கள் உள்ளன.
சேவை பெறாவிட்டாலும், வரி செலுத்தும் வகையில் சட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் அரையாண்டும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் வரி செலுத்த வேண்டும். 15-ம் தேதிக்கு மேல் செலுத்தாவிட்டால், அந்த தொகைக்கு மேல் வரி விதிக்கப்படும்.
நீண்டகாலம் வரி செலுத்தாத சொத்து உரிமையாளரிடமிருந்து, பொருட்களை ஜப்தி செய்யவும் சட்டத்தில் இடமுள்ளது. இந்நிலையில், குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி பாக்கி வைத்துள்ள வீடுகளுக்கு நோட்டீஸ் விநியோகிக்குமாறு சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, கடந்த சில நாட்களாகவார்டு வாரியாக, வீடு வீடாகச் சென்று நோட்டீஸ் விநியோகம் செய்யப்படுகிறது. அதில் குடிநீர் வரி செலுத்தாமல் தாமதித்தால், சொத்துகளை ஜப்தி செய்ய நேரிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சொத்து உரிமையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது: பலர் லட்சக்கணக்கில் வரி நிலுவை வைத்துள்ள நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சுமார் ரூ.500 நிலுவை வைத்திருப்போர் சொத்துகள் ஜப்தி செய்யப்படும் என்று நோட்டீஸ் கொடுக்கின்றனர்.
பல இடங்களில் குழாய் பதித்தும் குடிநீர் விநியோகம் இல்லை. பாதாள சாக்கடைக் கட்டமைப்பை ஏற்படுத்திய நிலையில், அது செயல்பாட்டுக்கு வரவில்லை ஆனால், ரூ.500 நிலுவை வைத்திருப்போரை இவ்வாறு தொந்தரவு செய்வது ஏற்புடையதாக இல்லை என்றனர். இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ``வாரியத்தில் ஆண்டுக்கு ரூ.1,100 கோடி வரி கிடைக்கும்.
நடப்பு நிதியாண்டில் ரூ.880 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.320 கோடியை வசூலிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில இடங்களில் களப் பணியாளர்கள் மீது புகார்கள் வந்துள்ளன. சொத்து உரிமையாளர் யாருக்கும் தொந்தரவு இல்லாத வகையில் நோட்டீஸ் விநியோகிக்குமாறு, அனைத்து களப் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றனர்.