கோவை: கோவையில் வெளிநோயாளிகளாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சை வருவோரில் சுமார் 10 சதவீதம் பேருக்கு ஃப்ளு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது: ''கோவையில் சராசரியாக புறநோயாளியாக சிகிச்சைக்கு வருபவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ப்ளூ வைரஸ் பாதிப்புக்காக வருகின்றனர். இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. யாருக்கெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதோ, அவர்களுக்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது. சுவாசக் குழாய் மூலமாகத்தான் இந்த வைரஸ் உடலுக்குள் செல்கிறது. ஒருவர் இருமும்போதும், தும்மும்போது மற்றவருக்கு பரவுகிறது.
வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி இருக்கும். இது நீடிக்கும்போது இருமல் வரும். பொதுவாக 7 நாட்களில் இந்த பாதிப்பு தானாகவே சரியாகிவிடும். எனவே, பொதுமக்கள் மருந்து கடைகளில் சுயமாக மருந்து வாங்கி உட்கொள்ளக்கூடாது. மருத்துவரின் ஆலோசனை பெற்று, பரிந்துரைக்கப்படும் மருந்துகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். சிகிச்சை காலத்தில் மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். முடிந்தவரை கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
வீட்டுக்கு வெளியே சென்று வந்த பிறகு கை, கால்களை சோப்புபோட்டு கழுவிய பிறகே, வீட்டுக்குள் நுழைய வேண்டும். வைட்டமின் சி, புரத சத்து மிகுந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். உடலுக்கு கட்டாயம் ஓய்வு அளிக்க வேண்டும். கோவை மாவட்டம் முழுவதும் பள்ளிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என 93 இடங்களில் நாளை (மார்ச்.10) காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, சரியாகும் நிலையில் இருந்தால் அங்கேயே மருந்து, மாத்திரைகள் அளிக்கப்படும். மேல்சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் பரிந்துரைக்கப்படுவர்'' என்று அவர்கள் கூறினர்.