தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியத்தின் முதலாவது வாரியக் கூட்டம் 
தமிழகம்

சட்ட விரோத வெளிநாட்டு லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: அமைச்சர் கணேசன்

செய்திப்பிரிவு

சென்னை: சட்ட விரோதமான வெளிநாட்டு லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.

தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியத்தின் முதலாவது வாரியக் கூட்டம் சென்னை, தேனாம்பேட்டை, தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பேசுகையில், "தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் தான் அதிகளவில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழிற்சாலைகளில் பல லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு பணிபுரியும்போது எதிர்பாரா விதமாக ஏற்படும் விபத்தில் மரணம் அடைந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு உதவித் தொகை மற்றும் ஈமச்சடங்கு செலவினம் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியத்தில் 61,141 தொழிலாளர்கள் பதிவு பெற்றுள்ளனர். 4,724 தொழிலாளர்களுக்கு ரூ.2,19,38,950 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களால் தமிழகத்தில் தீப்பெட்டி உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை ஏற்று சட்ட விரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்கள் மீது பொட்டலப் பொருள்கள் விதிகளின் கீழ் சிறப்பு குழுக்கள் அமைத்து பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் கூறினார்.

SCROLL FOR NEXT