செய்தியாளர் சந்திப்பில் சைலேந்திர பாபு 
தமிழகம்

வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு: வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக கோவையில் டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு சிலர் தலைமறைவாக உள்ளனர். சிலர் நீதிமன்றத்தை நாடி உள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய வெளி மாநிலங்களில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர்.

தற்போது வதந்தி வீடியோக்கள் குறைந்துள்ளது. இருந்தாலும் தொடர்ந்து தொழிலாளர்களுடன் பேசவேண்டும் என்று கூறி உள்ளோம். காவல் துறை அதிகாரிகளும் தொடர்ந்து அவர்களுக்கு தைரியம் கொடுப்பார்கள். வட மாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் வைக்கவும், ரோந்து வாகனங்கள் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வட மாநில தொழிலார்களின் குடும்பத்தினரிடம் அதிக பயம் உள்ளது. அவர்களுக்கு இங்குள்ள சூழலை விளக்க, அவர்களது மொழியில் தகவல் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தொடர்பே இல்லாத வீடியோக்களை எந்த அடிப்படையில் பரப்பினர் என்று புலன் விசாரணையில் தெரியவரும்" என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT