தருமபுரி: தருமபுரி மாவட்டம் அமானி மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேசை, நாற்காலிகளை நொறுக்கிய 5 மாணவ, மாணவியர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாலக்கோடு வட்டத்தில் உள்ள அமானி மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப்பள்ளியில் பணியாற்றுகின்றனர்.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக முத்துசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்தப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் இருந்த மேசை நாற்காலிகளை சில மாணவ, மாணவியர் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து
விசாரிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், மேசை நாற்காலிகளை அடித்து நொறுக்கிய மாணவ, மாணவியர் 5 பேரை மாவட்ட கல்வித் துறை 5 நாட்களுக்கு இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல, பள்ளி வளாகத்தில் இவ்வாறான சம்பவம் நடக்க அனுமதித்தது தொடர்பாகவும், மேசை, நாற்காலிகள் சேதம் அடைந்தது தொடர்பாகவும் விளக்கம் அளிக்குமாறு பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு கல்வித் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.