கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி | கோப்புப்படம் 
தமிழகம்

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணை நிறைவு: 2 வாரங்களில் இறுதி அறிக்கை - ஐகோர்ட்டில் காவல் துறை தகவல்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கின் விசாரணை நிறைவடைந்துவிட்டது. மாணவி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்த, தடயவியல் துறையின் அறிக்கை பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதி அறிக்கை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த வந்த மாணவி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார்.இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், சிபிசிஐடி விசாரணை நியாயமாக இல்லை. கொலைக் குற்றச்சாட்டின் கீழ் இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் மறைத்துள்ளனர். எனவே இந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக் கோரி மாணவியின் தாய் செல்வி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், "மாணவி மரண வழக்கின் விசாரணை நிறைவடைந்துவிட்டது. மாணவி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்த தடயவியல் துறையின் அறிக்கை பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதி அறிக்கை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டது.

அப்போது, சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மாணவியின் தாய் செல்வி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடர்பாக காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டார். அப்போது, "காவல் துறை பதிலளிக்கும் வரை, விசாரணையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாமல், இந்த வழக்கில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்" என்று மாணவியின் பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, இந்த வழக்குகளின் விசாரணையை மார்ச் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT