கோப்புப்படம் 
தமிழகம்

உணவுப் பொருட்களை கிடங்குகளுக்கு கொண்டுசெல்வது தொடர்பான 75 டெண்டர்கள் வாபஸ்: தமிழக அரசு தகவல்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: உணவுப் பொருட்களை கிடங்குகளுக்கு கொண்டுசெல்வது தொடர்பாக கோரப்பட்ட 75 டெண்டர்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், உணவுப் பொருட்களை, மாவட்ட கிடங்குகள், அமுதம் அங்காடிகளுக்கு கொண்டு செல்வதற்காக வாகனங்களை பணியமர்த்துவது தொடர்பாக டெண்டர்கள் கோரியது. இந்த டெண்டர்களுக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நதியழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 வழக்குகள் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுக்களில், உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட மத்திய அரசின் சுற்றறிக்கையின் அடிப்படையில், மாநில அளவிலான குழு இந்த டெண்டர்களை கோரியுள்ளது. இது தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டம் மற்றும் விதிகளுக்கு விரோதமானது. இரண்டு கோடி ரூபாய்க்கு மேலான பணிகளுக்கான டெண்டருக்கு விண்ணப்பிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். அதை மீறி 14 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கியுள்ளது சட்டவிரோதமானது.

இந்த டெண்டரில் அனுபவமில்லாத நிறுவனங்ளும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த டெண்டர்களை ரத்து செய்து, புதிதாக டெண்டர்கள் கோர உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், டெண்டர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தரப்பில், டெண்டரில் பங்கேற்க போதுமான அளவில் யாரும் முன்வரவில்லை என்பதாலும், மனுவில் எழுப்பியுள்ள பிரச்சினைகளை கருத்தில் கொண்டும், 75 டெண்டர் அறிவிப்புகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. விரைவில் புதிய டெண்டர் அறிவிப்புகள் வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள்,மனுதாரர் தாக்கல் செய்திருந்த 75 வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT