தமிழகம்

சமுதாயம் பாதுகாப்பாக இருக்க ஆண்குழந்தை வளர்ப்பில் கவனம் தேவை: ஆளுநர் தமிழிசை

அ.முன்னடியான்

புதுச்சேரி: “எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் சவால்களை சமாளிப்பதுதான் பெண்களுக்கு இறைவன் கொடுத்துள்ள மிகப் பெரிய பலம்” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா வில்லியனூரில் இன்று நடைபெற்றது. விழாவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது: ''மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கு என்னென்ன திட்டங்களை கொடுக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, முத்ரா வங்கி திட்டத்தில் பெண்களுக்கென்று குறிப்பிட்ட சதவீதத்தில் தொழில் தொடங்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் சொல்லியுள்ளார். அதற்கான திட்டமும் இருக்கிறது. ஆனால் நாம் தான் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பெண்கள் உடல் நலத்தை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்களை போன்று உயரிய எண்ணம் கொண்டவர்கள் யாரும் கிடையாது. பிரதமர் சிறுதானியத்தை ஊக்கப்படுத்தி இருக்கிறார். அதில் அபிரிவிதமான சத்து இருக்கிறது. அதனை பெண்கள் சாப்பிடுங்கள். வீட்டில் இருப்பதவர்களுக்கும் கொடுங்கள். இன்றைய காலக்கட்டத்தில் எல்லோரும் ஒற்றுமையாக, வீட்டி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நாம் எவ்வளவு பேசினாலும் பெண் முதல்வராகவும், அமைச்சராகவும், தலைவராகவும், பொது வாழ்விலும் இருப்பதும் கஷ்டம்தான்.

ஆனால், எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அந்த சவால்களை சமாளிப்பதுதான் பெண்களுக்கு இறைவன் கொடுத்துள்ள மிகப் பெரிய பலம். பெண்கள் என்றால் உருவக் கேலி, விமர்சனங்கள் செய்வார்கள். ஆனால், எது செய்தாலும் அசரவே மாட்டேன் என்று இருப்பதுதான் பெண்களுக்கான பலமாக இருக்க முடியும். நான் ஆண்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் பெண்களின் முயற்சிகளை பாராட்டுங்கள். பக்க பலமாக இருங்கள். பெண்கள் என்றாலே சவால்கள் இருக்கும். ஆகவே எதற்காகவும் பெண்கள் உங்களுடைய மகிழ்ச்சியையும், உடல் நலத்தையும் தொலைக்காதீர்கள்.

நமக்கு உரிமை இருப்பது போன்று பெண் குழந்தைகளையும் உரிமை கொடுத்து வளருங்கள். அதேநேரத்தில் ஆண் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து, கண்டித்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் இந்த சமுதாயம் பாதுகாப்பாக இருக்கும். நாம் இதுபோன்ற விழாக்களை கொண்டாவது மட்டுமின்றி வருங்காலத்தில் எல்லா விதத்திலும் உயர்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். அரசு நம்மை பாதுகாக்க தயாராக இருக்கிறது'' என்றார்.

முதல்வர் ரங்கசாமி பேசுகையில், ''இன்றைய நிலைக்கு புதிய தொழில்நுட்பம் மிக அவசியம். இப்போது அரசின் உதவித் தொகைகளை வங்கிகளில் செலுத்திவிடுகிறோம். ஏறக்குறைய 75 சதவீதம் பெண்கள் வங்கிக்கு செல்கின்றனர். தொழில்நுட்பம் குறித்து தெரிந்து கொள்கின்றனர். அதனை 100 சதவீதமாக கொண்டு வரவேண்டும் என்பது மத்திய அரசின் எண்ணமாக உள்ளது. ஒரு காலத்தில் வேண்டுமானால் பெண்கள் அடக்கி ஆளப்பட்டார்கள் என்ற நிலை இருந்திருக்கலாம். ஆனால் அந்த நிலை இப்போது மாறி வருகின்றது. பல்வேறு துறைகளில் பெண்கள் உள்ளனர்.

புதுச்சேரி அரசானது மகளிருக்கும், அவர்களின் பாதுகாப்புக்கும் பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, பெண்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கினால் முத்திரைத்தாள் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படுகிறது. இதனால் அதிளவில் பெண்கள் பெயரில் சொத்துகள் இருப்பதையும், குடும்பத்தில் மரியாதை இருப்பதையும் பார்க்கின்றோம். அதேபோன்று குடும்ப தலைவிகளின் பாதுகாப்பு கருதி புதுச்சேரி அரசு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் என்று அறிவித்தோம். 13 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை செலுத்தப்பட்டுள்ளது.

இன்னும் 70 ஆயிரம் குடும்பங்களுக்கு செலுத்தப்பட இருக்கிறது. பெண் கல்வியைப் பொறுத்தவரையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கையின் காரணமாக பெண்கள் அனைவரும் கல்வி கற்று வருகின்றனர். ஒருகாலத்தில் பிளஸ் 2 முடித்தவுடன் இடைநிற்றல் என்பது இருந்தது. ஆனால் இன்றைக்கு எல்லா கல்லூரிகளிலும் பெண்கள் சேர்ந்து படிப்பதையும், முதலிடத்தில் வருவதையும் பார்க்கிறோம். அரசு வேலைகளில் அதிகளவில் பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சிறப்பாக, விரைவாக பணியாற்றுவதையும் பார்க்க முடிகிறது. பெண்களுக்கு என்று மேலும் பல திட்டங்களை அரசு கொண்டு வரும்'' என்று அவர் பேசினார்.

விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் செயலர் உதயகுமார், இயக்குநர் முத்து மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT