சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பழனிசாமி பங்கேற்று பேசினார்.
அவர் வருகையையொட்டி திருவொற்றியூர் நெடுஞ்சாலை மகாராணி திரையரங்கம் முதல் தண்டையார்பேட்டை காவல்நிலையம் வரை சாலையின் இருபுறமும் அதிமுக கட்சியின் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை வைப்பதற்கு அதிமுகவினர் சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் அனுமதியில்லாமல் எல்இடி திரைகளை வைத்து, அதில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அதிமுகவுக்கு சம்பந்தமில்லாதவர்கள், ஏற்கெனவே பேசிய உறுதிப்படுத்தப்படாத தகவல்களை ஒளிபரப்பு செய்துள்ளனர் என்றும், இந்த நிகழ்வு சட்டத்துக்கு புறம்பானது என்றும், இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கும் முயற்சி எனவும் திமுக வட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில், அதிமுகமாவட்ட செயலாளர் ராஜேஷ், ஆர்கே நகர் பகுதி செயலாளர் சீனிவாச பாலாஜி, வட்ட செயலாளர் அன்பு உள்ளிட்டோர் மீது 10 பிரிவுகளில் தண்டையார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.