‘இந்து தமிழ் திசை' மற்றும் ‘வாக்கரூ’ சார்பில் கரூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுடன் மாநகராட்சி மேயர் கவிதா, ஆணையர் ந.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர். 
தமிழகம்

‘இந்து தமிழ் திசை', ‘வாக்கரூ’ சார்பில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்: கரூர் மாநகராட்சி மேயர், ஆணையர் வழங்கினர்

செய்திப்பிரிவு

கரூர்: கரூர் மாவட்டத்தில் ‘இந்து தமிழ் திசை' மற்றும் ‘வாக்கரூ’ சார்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ‘நடந்தால் நன்மையே நடக்கும்' என்ற தலைப்பில் நடைபயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வண்ணம் தீட்டுதல் மற்றும் கட்டுரைப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.

இதில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் கவிதா, ஆணையர் ந.ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

‘இந்து தமிழ் திசை' நாளிதழ் முதுநிலை விற்பனை அலுவலர் ஜி.செல்லையா வரவேற்றார். வாக்கரூ கரூர் டீலர் ஹெச்.காஜா முன்னிலை வகித்தார்.

போட்டிகளில் முதல் 3 பரிசு பெற்றவர்கள் விவரம்: வண்ணம் தீட்டும் போட்டியில், தேசியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவி எஸ்.ப்ரனிதா, பாப்பக்காப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் எஸ்.மதன், காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி என்.அப்ரின் பாத்திமா.

கட்டுரைப் போட்டி ஜூனியர் பிரிவில், வேங்காம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.இந்துமதி, மணவாசி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி ஆர்.தரணிஸ்ரீ, பாப்பக்காப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் எம்.பூமணி.

கட்டுரைப் போட்டி சீனியர் பிரிவில், கரூர் பசுபதீஸ்வரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.கார்த்திகா, தாந்தோணிமலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் பி.யதிஷ்யுகந்தன், புனவாசிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பி.அபிநயா.

SCROLL FOR NEXT