கோவை: வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தி தொடர்பாக, கோவையில் பிஹார் மாநில அரசுக் குழுவினர் இன்று (மார்ச் 6) தொழில் நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.
சமூக வலைதளங்களில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. இதையடுத்து பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பிஹார் மாநில அரசின் சார்பில், அரசு உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று (மார்ச் 6) கோவைக்கு வந்தனர். பிஹார் மாநில ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் டி.பாலமுருகன் தலைமையில், காவல் துறைத் தலைவர்(சிஐடி) பி.கண்ணன், தொழிலாளர் ஆணையர் அலோக்குமார், காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் வந்திருந்தனர். இக்குழுவினர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று பிற்பகல் வந்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ் உள்ளிட்டோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் அவர்களை வரவேற்றனர். பின்னர் இரு தரப்பினரும் இணைந்து ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர். அதில், பல்வேறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பிஹார் மாநில ஊரக வளர்ச்சித் துறை செயலர் டி.பாலமுருகன் கூறியதாவது: "கோவை மாவட்டத்தில் பிஹார் மாநில தொழிலாளர்கள் பணியாற்றும் சில இடங்களில், மாவட்ட நிர்வாகம், காவல் துறையுடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பிஹார் மாநிலத்திலிருந்து கோவை மாவட்டத்துக்கு வந்து தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடினோம், அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் விவாதிக்கப்பட்டது. சில வீடியோக்கள் மூலம் பொய்யான தகவல்கள் பரவியது. இதைப் பார்த்து தொழிலாளர்கள் முதலில் மிகவும் பயந்தனர். அந்தச் செய்தி பொய்யானது என அவர்களுக்கு விளக்கப்பட்டது. இது தொடர்பாக வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றும் இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறை, காவல்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் மற்றும் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
வெளி மாநில தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம், காவல் துறை இணைந்து செய்துவருகின்றன. இந்த வீடியோ பிஹார் தொழிலாளருடையது இல்லை என அவர்கள் புரிந்து கொண்டனர்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, மாவட்டத்தில் உள்ள சங்கீதா டெக்ஸ்டைல்ஸ், யூனிட் 1, யூனிட்-2, தொப்பம்பட்டியில் உள்ள டிகேஎல் நைட்ஸ் இந்திய பிரைவேட்லிமிட், வீரபாண்டி பிரிவில் உள்ள அக்வாசப் இன்ஜினியரிங் ஆகிய இடங்களில் பிஹார் மாநில அரசு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.