சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இருந்த ஐந்து பேருக்கு நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
வழக்கறிஞர்களாக இருந்துவந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி 2021ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக் ஆகியோருக்கும், அக்டோபர் 28-ம் தேதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தும் கூடுதல் நீதிபதிகளாக, அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற பரிந்துரையை ஏற்று, கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்துவரும் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, 5 கூடுதல் நீதிபதிகளுக்கும் நிரந்தர நீதிபதிகளாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.