மதுரை: தமிழகத்தில் சாதாரண நகரங்களில் கூட புறவழிச் சாலைகள் முழுமையாக அமைத்து, வெளியூர் சரக்கு வாகனங்கள், பஸ்கள் நகரச் சாலைகளில் வராமல் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் முக்கிய சுற்றுலா நகராகவும், வர்த்தக நகராகவும் திகழும் மதுரையில் இன்னமும் முழுமையாக புறவழிச் சாலைகளும், ஒருங்கிணைந்த உள்வட்ட சாலையும் அமைக்கப்படவில்லை.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மதுரை நகரப் பகுதியில் வராமல் செல்வதற்கு ரிங் ரோடு, பை-பாஸ் சாலைகள் இருந்தாலும், பரவை, சமய நல்லூர், விளாங்குடி, ஆரப்பாளையம், சோழவந்தான் போன்ற மதுரையின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் இருந்து ராமநாதபுரம், ராமேஸ்வரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் இன்னும் நகரப் பகுதிக்குள் வந்து செல்கின்றன.
அதுபோல், ராமநாதபுரம், ராமேசுவரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடியிலிருந்து மதுரையின் கிழக்குப் பகுதி வழியாக மேற்கு பகுதிக்கு செல்லும் வாகனங்கள் நகரப் பகுதியில் வந்தே காள வாசல், பரவை, சமயநல்லூர், சோழவந்தான், விளாங்குடிக்கு செல்கின்றன. மதுரை நகரின் மையமாக வைகை ஆறு, நகரப் பகுதிகளை வடக்கு மற்றும் தெற்காக இரண்டாக பிரிக்கிறது. இரு பகுதிகளையும் இணைக்கும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே அண்ணா நகர் பிடிஆர் மேம்பாலம், குருவிக்காரன் சாலை மேம்பாலம், செல்லூர் மேம்பாலம், யானைக்கல் பாலம், ஏவி மேம்பாலம், ஒபுளாபடித்துரை மேம்பாலம், ஆரப்பாளையம் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலங்கள் வழியாக மக்கள், இரு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால், இந்த மேம்பாலங்களையும், நகரச் சாலைகளையும் ஒருங்கிணைந்து ஆற்றின் இரு புறமும் சாலை இல்லாததால் நகர்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், மதுரை நகரச் சாலைகளில் ‘பீக் அவர்’ மட்டுமில்லாது நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகிவிட்டது.
குறிப்பாக பள்ளி, அலுவலகங்கள் நேரமான காலை மற்றும் மாலை நேரங்களில் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு நகரச் சாலைகளில் வாகனங்கள் ஸ்தம்பிக்கின்றன. அதனால், மக்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். போக்குவரத்து சிக்னல்களில் 15 நிமிடங்களுக்கு மேல் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. அதனால், கடந்த 15 ஆண்டிற்கு முன்பாகவே கருணாநிதி முதல்வராக இருந்தபோதே வைகை ஆற்றின் இரு புறமும் நான்கு வழிச் சாலை திட்டமிடப்பட்டது. ஆனால், அப்போது போதிய நிதி ஆதாரம் இல்லாமல் இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் இருந்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வெளியூர் வாகனங்கள் நகரப்பகுதியில் வராமல் தடுக்கவும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மாநகராட்சியும், சிறப்பு நிதியில் நெடுஞ்சாலையும் இணைந்து வைகை ஆற்றின் இரு கரைகளிலும் நான்கு வழிச் சாலை அமைக்கும் திட்டத்தை தொடங்கின. வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், நகரப்பகுதிக்குள் வராமல் கிழக்குப் பகுதிக்கு செல்வதற்கு தற்போது நெடுஞ்சாலைத் துறையும், மாநகராட்சியும் இணைந்து வைகை ஆற்றின் வட கரையில் 8 கி.மீ.-க்கும், தென் கரையில் 8 கி.மீ. தொலைவிற்கும் விளாங்குடி முதல் விரகனூர் வரை ரூ.384 கோடியில் ஆற்றின் பிரமாண்ட நான்கு வழிச் சாலைகள் அமைக்கும் பணியை தொடங்கியது.
ஆனால், 3 ஆண்டிற்கு மேலாகியும் இந்த சாலைகள் தற்போது வரை முழுமையாக அமைக்கப்படவில்லை. முழு பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே மாநகராட்சி போட்ட வைகை கரை சாலைகள், சேதமடைந்து சிதலமடைந்து போய்விட்டது. மேலும், இந்த சாலையை மாநகராட்சி முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி போடாததால் சில இடங்களில் 50 அடி நான்கு வழிச் சாலையாகவும், பல இடங்களில் இரு வழிச்சாலையாக குறுகலாக அமைத்துள்ளது. மாநகராட்சியின் இந்த செயலால் வைகை கரையில் தனியார் ஆக்கிமிப்பாளர்கள் தப்பினர். வைகை வடகரை செல்லூர் பாலம் அருகே, குருவிக்காரன் சாலை பாலத்தில் இருந்து அண்ணாநகர் பிடிஆர் பாலம் வரை, வண்டியூர் முதல் விரகனூர் ‘ரிங்’ ரோடு வரை, இந்த திட்டத்தில் தற்போது வரை சாலைப் போடப்படவில்லை.
அதனால், இந்த வைகை வடகரை சாலை திட்டமிட்டப்படி விரகனூர் ரோடுடன் இணைக்கப்படாமல் வைகை ஆற்றில் துண்டாக தனுஷ்கோடி அரிச்சல் முனை சாலைபோல் ‘யூ’ வளைவுடன் நிற்கிறது. இந்த சாலையில் செல்வோர் விரகனூர் சென்று திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை செல்ல முடியாது. வண்டியூரிலே மீண்டும் வந்த சாலையிலே திரும்பி வரும் அவலநிலை உள்ளது.
அதுபோல், வைகை கரை தென் கரை சாலையில் தென்கரை புட்டு தோப்பு முதல் ராஜாமில் பாலம் வரை, ராஜாமில் பாலம் முதல் குருவிக்காரன் சாலை வரையும் இன்னும் சாலை போடப்படவில்லை. இப்படி விரகனூர் ‘ரிங்’ ரோட்டையும், ஆரப்பாளையம் வழியாக சமயநல்லூர் ‘ரிங்’ ரோட்டையும் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்ட வைகை கரை சாலையில் முழுமை அமையாமல் மக்களுக்கும் பயன்படாமல் இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்ட ரூ.384 கோடி வீணாகிப்போய் உள்ளது.
அரசு இவ்வளவு கோடி நிதி ஒதுக்கியும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் பொறுப்பற்ற செயலால் தற்போது வரை வைகை கரை சாலை முழுமை அடையாமல் உள்ளதால் மக்கள் தினமும் போக்குவரத்து நெரிசலில் நீந்தியபடி பெரும் துயரத்தை அனுபவிக்கின்றனர். மதுரை ஒரு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரம் என்பதால் இந்த வைகை கரை சாலைகள் முழுமையாக முடிந்தால் அது நகர வளர்ச்சிக்கும், சுற்றுலா மேம்பாட்டிற்கும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை வருகை தந்துள்ள முதல்வர் ஸ்டாலின், வைகை கரை சாலை விவரங்களை கேட்டறிந்து அதை விரைவுப்படுத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.