மதுரை: தென் மாவட்ட மக்களுடைய தொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும் வாய்ப்பளிக்கும் காவேரி குண்டாறு நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், இரண்டு நாட்கள் கள ஆய்வு செய்வதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஜெயலலிதா அரசில் கோவை, சேலம், மதுரைக்கு பஸ் போர்ட் என்கிற மத்திய அரசின் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கான நிலம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செக்கானூரணி பகுதியில் கண்டறியப்பட்டது. அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின், கள ஆய்வில் விவாதித்து நடவடிக்கை எடுக்கப்பாரா?
தென் மாவட்டத்தின் நுழைவாயிலாக இருக்கிற மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைக்க இந்த கள ஆய்வில் முதல்வர் விவாதிப்பாரா?
தென் மாவட்ட மக்களுடைய தொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும் வித்திடக்கூடிய காவேரி குண்டாறு நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?'' என்று ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.