பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர். | படம்: பு.க.பிரவீன் | 
தமிழகம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

சென்னை: பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுப் பணிகளில் காலி இடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

இதையொட்டி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐவளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ச.மயில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால்,ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகியும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. இது மிகவும் வேதனையளிக்கிறது.

உயர்கல்வி ஊக்க ஊதியம்: ஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதியம் கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகும், அதே நிலையே தொடர்கிறது. புதிய ஓய்வூதியத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக, ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேசி, அவற்றை நிறைவேற்ற தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல்,தமிழகத்துக்கென பிரத்யேக கல்விக் கொள்கையை வடிவமைக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதேநேரம், தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மாதிரிப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், மறைமுகமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

அனைவருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT