ஈரோடு: பண்ணாரி - திம்பம் சாலையில் இரவு நேர போக்குவரத்து தடைக்குப் பின்னர் காலையில் வாகனங்கள் அனுமதிக் கப்படுகின்றன. இரவில் காத்திருக்கும் வாகனங்கள் ஒழுங்குபடுத்தப்படாததால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரூ செல்லும் தேசிய நெடுஞ்சாலை, பண்ணாரியில் இருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக திம்பம் சென்று, அங்கிருந்து கர்நாடக மாநிலத்தை அடைகிறது. இந்த சாலையில் தாளவாடி மற்றும் ஆசனூரையொட்டி 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கு இந்த சாலை வழியாக சத்தியமங்கலத்தை அடைய வேண்டியுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவு: இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களால், வனவிலங்கு களுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் வகையில், இரவு நேரத்தில் பண்ணாரி - திம்பம் சாலையில் வாகனப் போக்கு வரத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக, கர்நாடகாவில் இருந்து பண்ணாரி வரும் வாகனங்கள் காரப்பள்ளம் வனத்துறை சோதனைச்சாவடியில், இரவில் நிறுத்தப்படுகின்றன. அதேபோல பண்ணாரி சோதனைச் சாவடிக்கு முன்பாக இரவு 9 மணி முதல் வாகனங்கள் நிறுத்தப் படுகின்றன.
போட்டி போடும் வாகனங்கள்: இரு சோதனைச்சாவடிகளும் காலை 6 மணிக்கு திறக்கப்படும் நிலையில், அங்கு காத்திருக்கும் கனரக வாகனங்கள், லாரிகள், ஜீப், கார் உள்ளிட்ட வாகனங்கள் ஒழுங்கின்றி திம்பம் சாலையில் முந்திச் செல்கின்றன. இதனால், நாள்தோறும் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு வேகமாகச் செல்வதால் விபத்துகளும் ஏற்படுகின்றன.
இதுகுறித்து தாளவாடி சுற்றுவட்டார கிராம மக்கள் கூறியதாவது திம்பம் சாலையில் இரவில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதால், காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் இருந்து 3 கிமீ தூரம் வாகனங்கள் இரவில் நிறுத்தப்படுகின்றன. இவை முறையாக ஒழுங்குபடுத் தப்படாமல், சாலை முழுவதையும் ஆக்கிரமித்து 3 வரிசைகளாக நிற்கின்றன. இதனால், உள்ளூர் மக்களின் இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மான்கள் உயிரிழப்ப: இந்த நெரிசல் காரணமாக, கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதச் சென்ற மாணவியர், உரிய நேரத்தில் செல்ல முடியாததால், தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல, சோதனைச்சாவடியில் இருந்து செல்லும் வாகனங்கள் போட்டி போட்டு செல்வதால், வனவிலங்குகள் விபத்தில் சிக்குகின்றன. அரேபாளையம் பிரிவு அருகில் சில நாட்களுக்கு முன்பு 3 மான்கள் விபத்தில் உயிரிழந்தன.
அபராதம் விதிக்க வேண்டும்: இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், காரப்பள்ளம் மற்றும் பண்ணாரி சோதனைச்சாவடியில் வாகனங்களை ஒரே வரிசையில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் வாகனங் களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வரிசை தவறி சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவது குறையும். வாகனங்களில் அடிபட்டு வனவிலங்குகள் இறக்கும் சம்பவங்களும் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
உள்ளூர் வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வரிசை தவறி சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.