திருப்போரூர் கந்தசுவாமி கோயில் உற்சவர் வீதி உலா ஆதிதிராவிடர் பகுதிக்குள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றது. 
தமிழகம்

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் வரலாற்றில் முதன்முறையாக ஆதிதிராவிடர் பகுதியில் உற்சவர் வீதியுலா!

செய்திப்பிரிவு

திருப்போரூர்: திருப்போரூர் கோயில் அமைக்கப்பட்டு 390 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக ஆதிதிராவிடர் பகுதிக்குள் உற்சவர் கந்தசுவாமி வீதி உலா வந்தார். அப்போது பட்டாசு வெடித்து, பூக்களைத் தூவி கந்தசுவாமியை அப்பகுதி மக்கள் வரவேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக முத்துக் குமாரசாமி உற்சவர் வீதி உலா பரிவேட்டை நடத்துவதற்காக ஆலத்தூர், தண்டலம் கிராமங்களுக்குச் செல்வது வழக்கம்.

இந்த கிராமங்களுக்கு சென்று விட்டு திரும்பும்போது திருப்போரூரில் உள்ள ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் தெருவிலும் வீதி உலா நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக அப்பகுதி மக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் படவேட்டம்மன் கோயில் தெருவிலும் சுவாமி வீதி உலா நடத்த வேண்டும் என்றும் அதற்கு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று பகல் 2 மணியளவில் ஆலத்தூர், தண்டலம் கிராமங்களில் வீதி உலா முடித்துவிட்டு முத்துக்குமாரசாமி மயில் வாகனத்தில் திருப்போரூர் வந்தடைந்தார். இதையடுத்து மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன், திருப்போரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன், இந்து சமய அறநிலையத் துறையினர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிக்கு சுவாமி வீதி உலா புறப்பட்டது.

திருப்போரூர் கோயில் அமைக்கப்பட்டு 390 ஆண்டுகள் ஆன நிலையில் உற்சவர் ஆதிதிராவிடர் பகுதிக்குள் வீதி உலா நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். இதனால் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், பூத்தூவி சுவாமியை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

பின்னர், படவேட்டம்மன் கோயில் அருகில் சுவாமி நிறுத்தப்பட்டு பொதுமக்கள் 51 தட்டுகளில் பூ, பழம் அடங்கிய வரிசைத்தட்டுகளை வைத்து சுவாமியை வணங்கினர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் தீபாராதனை செய்து பிரசாதம் பெற்று சென்றனர். விழாக்குழு சார்பில் காவல்துறை, வருவாய்த் துறை, ஸ்ரீபாதம் தாங்கிகள் உள்ளிட்டோருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT