படம்: எம் சாம்ராஜ்
புதுச்சேரி: புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் - 4,49,554, பெண்கள் - 5,07,297, மூன்றாம் பாலினத்தவர் - 146 என மொத்தமாக 9,56,997 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்பட்ட 2026-ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை விட இதில் 12,786 வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ரவிபிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 1.1.2027-ஐ தகுதி நாளாக கொண்டு மேற்கொள்ளப்படும் புகைப்பட வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு சுருக்க திருத்தத்தின் ஒரு பகுதியாக தயாரிக்கப்பட்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல், 30 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வரைவு வாக்காளர் பட்டியலின் இரண்டு பிரதிகள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியல், தலைமை தேர்தல் அதிகாரியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ceopuducherry.py.gov.in/-லும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்கள் தங்களது விவரங்களை சரிபார்த்துக் கொள்வதற்காக, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களுக்குச் சென்று வரைவு வாக்காளர் பட்டியலைப் பார்வையிடலாம்.
2027-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண்கள் - 4,49,554, பெண்கள் - 5,07,297, மூன்றாம் பாலினத்தவர்-146 என மொத்தமாக 9,56,997 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் புதிதாக 23,180 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 10,394 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இது கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்பட்ட 2026-ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த 9,44,211 வாக்காளர்களுடன் ஒப்பிடுகையில், 12,786 வாக்காளர்கள் (1.35 சதவீதம்) நிகர அதிகரிப்பை குறிப்பிடுகிறது.
இன்று முதல் டிசம்பர் 11-ம் தேதி வரை கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் வழங்குவதற்கான காலம் ஆகும். தகுதியுடைய அனைத்து குடிமக்களும் வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் மற்றும் விவரங்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை சரிபார்த்து, தேவையான இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உரிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1.1.2027 அன்று 18 வயதை அடைந்த அல்லது தகுதியுடைய அனைத்து குடிமக்களும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், 1.4.2027, 1.7.2027 மற்றும் 1.10.2027 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து தகுதி பெறும் நாட்களில் 18 வயது வரை உள்ளவர்களும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி முன்கூட்டியே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறுவதற்காக, நவம்பர் 21, 22, 28, 29 ஆகிய நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அவரவர் தொடர்புடைய வாக்குச்சாவடிகளில் பணியில் இருப்பார்கள். வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை வாக்காளர் சேவை இணையதளம் (https://voters.eci.gov.in) அல்லது ‘ECINET’ செயலி மூலம் இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
வாக்காளர் பதிவு அலுவலரால் பிறப்பிக்கப்படும் உத்தரவால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-இன் பிரிவு 24(ஏ)-ன் கீழ் மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம். முதல் மேல்முறையீட்டு அதிகாரியின் முடிவுக்கு எதிராக, மேற்கண்ட சட்டத்தின் பிரிவு 24(பி)-ன் கீழும், வாக்காளர் பதிவு விதிகள், 1960-ன் விதி 27-ன் படியும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம்.
இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 4-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. துல்லியமான மற்றும் பிழையற்ற வாக்காளர் பட்டியல்களை தயாரிக்கும் பணியில் தேர்தல் துறைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.