கடலூர்: குறிஞ்சிப்பாடியில் ஸ்டுடியோ உரிமையாளர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க உதவிய சிசிடிவி கேமராவுக்கு போலீஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் முருகவேல் மகன் சுந்தரமூர்த்தி (38), குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். இவர் கடந்த 27-ம் தேதி இரவு கடையை மூடிவிட்டு பைக்கில் வீட்டிற்கு சென்றார்.
சுப்புராயர் நகர் கழுதை ஓடை பாலம் அருகே வந்தபோது பின்னால் வந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்து கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து சுந்தரமூர்த்தி மனைவி சசிகலாவதி குறிஞ்சிப்பாடி போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை நடத்தினர். கொலையில் துப்பு கிடைக்காமல் போலீஸார் கடந்த 5 நாட்களாக திணறி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா மூலமாகவே கொலை செய்த கூலிப்படையை குறிஞ்சிப்பாடி போலீஸார் நேற்று கைது செய்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா சிசிடிவி கேமராவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு கோயிலில் அர்ச்சகரே உண்டியல் பணத்தை திருடுவதை சிசிடிவி கேமரா மூலம் போலீஸார் கண்டறிந்தனர் என்பது குறிப் பிடத்தக்கது.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா கூறுகையில், “பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இதை நான் செய்கிறேன். அனைவரும் அவர்களது வீட்டு வாயிலில் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும். இதன்மூலம் குற்ற சம்பங்களை தடுக்க முடியும், குற்றவாளிகளை எளிதில் பிடிக்க முடியும்” என்றார்.