தமிழகம்

கருணாநிதி முதல்வராக இருந்தபோது அறிவித்த விருதுநகர் அரசு பல் மருத்துவ கல்லூரி தொடங்கப்படுவது எப்போது?

இ.மணிகண்டன்

விருதுநகர்: கருணாநிதி முதல்வராக இருந்தபோது அறிவிக்கப்பட்ட அரசு பல் மருத்துவக் கல்லூரி விருதுநகரில் தொடங்கப்படுவது எப்போது என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி, விருதுநகரில் அரசு பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

2017-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் பழனிசாமி, விருதுநகரில் அரசு பல் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு முதல் கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். இதனிடையே அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கும் ஒப்புதல் கிடைத்தது. இதற்காக விருதுநகர் ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் 28 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.

அதன் அருகிலேயே 5 ஏக்கரில் அரசு பல் மருத்துவக் கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கான சிறப்பு அலுவலராக சென்னை பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். ஆனால், இடம் தேர்வு செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது அறிவித்த அரசு பல் மருத்துவக் கல்லூரி திட்டத்தை விரைந்து செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விருதுநகர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT