விருதுநகர்: விருதுநகருக்கு நேற்று வந்த இஸ்ரோ ஆலோசகர் சிவன், அங்குள்ள பராசக்தி மாரியம்மன் கோயிலில் குடும்பத்துடன் வழிபட்டார். பின்னர், காமராஜர் இல்லத்துக்குச் சென்று, அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் சிவன் கூறியதாவது:
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டப் பணிகள் இந்தியவிண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேகமாக நடைபெற்று வருகின்றன. நிலவில் ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-3 விண்கலம், விரைவில் விண்ணில் ஏவப்படும்.
அதேபோல, சூரியனைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான விண்கலத்தை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டிலிருந்து ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை அனுப்புவதற்கான செலவு குறைவாக உள்ளது. அதனால் பல நாடுகள் இந்தியாவின் உதவியுடன், அவர்களது செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த விரும்புகின்றன. அதற்காக நாம் கட்டணம் பெறுகிறோம். இதனால் அந்நியச் செலாவணி உயர்கிறது.
டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டபல்வேறு திட்டங்களை செயல்படுத்த செயற்கைக்கோள்களின் உதவி அவசியம். இதில் இஸ்ரோவின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.