திருப்பூர் அனுப்பர்பாளையம்  நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வடமாநிலத் தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு. 
தமிழகம்

திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு நேரில் சென்று வடமாநில தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீஸார்

செய்திப்பிரிவு

திருப்பூர்/கோவை: திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகேயுள்ள நகரில் வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றும் பனியன் நிறுவனத்துக்கு நேற்று சென்ற மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு, வடமாநிலத் தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சமூக வலைதளங்களில் பரவும்வீடியோக்களில் உள்ள சம்பவங்கள், திருப்பூரில் நடைபெற்றவை இல்லை. எனினும், வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவல் துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பல்வேறு மொழி பேசக்கூடிய தன்னார்வலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஏதேனும் அச்சம் இருப்பின், காவல் துறையின் கட்டுப்பாடு அறையைத் தொடர்புகொண்டு, தகவல் தெரிவிக்கலாம். அனைத்துத் தரப்பு தொழிலாளர்களும் அமைதியாகப் பணிபுரிந்து வருகின்றனர்.சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய பாதுகாப்பு சட்டம்: பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக மக்கள் எந்த வேறுபாட்டையும் பார்ப்பதில்லை. ஆனால் சில அமைப்பினர், அரசியல் ஆதாயத்துக்காக, வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை விதைத்து வருகின்றனர். வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சம் காரணமாக வெளியேறுவதால், தங்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக, தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை விதைப்போர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற கடும் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் தொழிலாளர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டியது தமிழக அரசின் கடமை.இதை முதல்வர் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வதந்தி பரப்பப்படுகிறது - அமைச்சர் சாமிநாதன்: தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காங்கயத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஹோலி பண்டிகையைக் கொண்டாட வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். திருப்பூரில் யாரும் தாக்கப்படவில்லை. ஊர் அமைதியாகவும், பதற்றமின்றியும் உள்ளது. சிலர் திட்டமிட்டு, பொய் செய்தி பரப்புகின்றனர். இதை காவல் துறை உன்னிப்பாக கவனிக்கிறது.

வடமாநிலத்தவரைப் பாதுகாக்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் டிஜிபி உள்ளிட்டோர் தீவிரப்படுத்தியுள்ளனர். வடமாநிலத்தவருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், காவல் நிலையத்தில் அல்லது காவல் கட்டுப்பாட்டு அறையில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT