தமிழகம்

தொட்டபெட்டா மூலிகை பண்ணை தைலங்கள் உற்பத்தியில் சத்தமில்லாமல் சாதிக்கும் மகளிர் சுய உதவிக்குழு

ஆர்.டி.சிவசங்கர்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் மலேரியா காய்ச்சலுக்கு மருந்து தயாரிக்க உருவாக்கப்பட்ட சின்கோனா தொழிற்சாலைகள் மூடப்பட்டதும், அத்துறையிலிருந்த பலர் வனத்துறைக்கு மாற்றலாகினர்.

ஆனால், இதில் பாதிக்கப்பட்ட சிலரோ செய்வதறியாமல் திகைத்த போது, 1994-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது தான் தொட்டபெட்டா மூலிகைப் பண்ணை. வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 195 ஏக்கர் நிலப்பரப்பில், தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு அருகே இப்பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 30 ஏக்கர் பரப்பில் 129 ரகங்களிலான மூலிகைச் செடிகள் வளர்க்கப்படுகின்றன.

இங்கு ஒற்றை தலைவலிக்கான உடனடி நிவாரணியிலிருந்து, புற்றுநோய் வரை பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கும் மருந்து தயாரிக்க பயன்படும் மூலிகைகள் உள்ளன.

அதேபோல, கற்பூர தைலம், யூகலிப்டஸ் தைலம், ஜெரேனியம், மூட்டு வலிக்கு மருந்தாக பயன்படும் கல்திரியா தைலம், கூந்தல் செழித்து வளர்வதற்கான தைலம், புத்துணர்வுக்கான தைலம், கொசு மற்றும் பூச்சிகளை விரட்ட சிட்ரோநல்லா தைலம் என பல்வேறு மூலிகை தைலங்கள், இப்பண்ணையிலுள்ள மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

இப்பணியில், தற்போது 50 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சம்பளத்துக்காக மட்டும் வேலை செய்யவில்லை. மகளிர் சுய உதவிக் குழுக்களாக செயலாற்றுவதால் கிடைக்கும் லாபத்தில் பங்குதாரர்களாகவும் உள்ளனர். அதனால், அவர்கள் தங்கள் முழுத் திறமையையும் காட்டுகின்றனர். வனத்துறையினருடன் சேர்ந்து வனத்தை பாதுகாக்கும் பணியிலும், மூலிகைகளை உற்பத்தி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ள அவர்களது ஆண்டு வருவாய் சுமார் ரூ.60 லட்சம்.

இது தொடர்பாக இந்த மூலிகை மையத்தின் வழிகாட்டுநரான கே.உதயகுமார் கூறியதாவது: நாட்டிலேயே சிறப்பாக செயல்படும் அரசு மூலிகைப் பண்ணைகளில் தொட்டபெட்டாவிலுள்ள மூலிகைப் பண்ணையும் ஒன்று. இப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் தைலம் தொண்டை வலிக்கும், கல்தேரியா மூட்டு வலிக்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.

மேலும், சினரேரியா போன்ற கண் தொடர்பான நோய்களுக்கும், டிஜிட்டாலிஸ் இதய நோய்க்கு மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது. இங்கு வளர்க்கப்படும் மூலிகைகள் பற்பசை தயாரிப்பு நிறுவனங்களுக்கும், லெமன் வர்டினா வயிற்று உபாதைகளுக்கும், லெமன் கிராஸ் சோப்பு மற்றும் அழகு சாதன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பயன்படுகின்றன.

மேலும், சேஜ் பிட்சா, ஒயின் தயாரிக்கவும், ஓரகானோ சிட்ரனெல்லா பூச்சி விரட்டியாகவும், பேராகன், லெமன் பாலம், பார்சிலி ஆகியவை உணவுப் பொருட்கள் தயாரிப்பிலும் முக்கிய பொருட்களாக விளங்குகின்றன. இதை வாங்குவதற்கு மருந்து உற்பத்தி நிறுவனங்களும், அழகு சாதன தயாரிப்பு நிறுவனங்களும், உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போடுகின்றன.

இம்மையத்தில் தற்போது 14 வகையான மருத்துவ மூலிகைகள் வணிக ரீதியாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்துடன் சில்வர் டாலர், சில்வர் பேபி ஆகியவை வெளி அலங்காரங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இம்மையத்தின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை நீலகிரி வனக்கோட்டம் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பண்ணை பொறுப்பாளர் சீனிவாசன் கூறும்போது, "மூலிகை பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்ய, உதகை நகரில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டால், பண்ணையின் பொருட்கள் குறித்து மக்களுக்கு தெரிய வருவதுடன் விற்பனையும் அதிகரிக்கும்" என்றார்.

உதவி வனப்பாதுகாவலர் கே.சரவணகுமார் கூறும்போது, "தொட்டபெட்டா மூலிகை பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் தைலங்கள், வெளியிடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. உதகை தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா சிகரத்தில் இந்த மூலிகை பண்ணை பொருட்களை விற்பனை செய்ய வனத்துறை மூலமாக அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.

SCROLL FOR NEXT