சென்னை: சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட நந்தனம் அரசு ஆண்கள் கலை கல்லூரியில் 1,000 மாணவர்கள் அமரும் வகையில்ரூ.3.70 கோடியில் கலையரங்கம் கட்டப்பட உள்ளது. இதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அடிக்கல் நாட்டினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொருளாதாரம், சமூக அடிப்படையில் பின் தங்கிய மாணவர்கள் கல்வி பயிலும் கல்வி நிறுவனங்களில் நந்தனம் அரசு ஆண்கள் கல்லூரியும் ஒன்று. இக்கல்லூரி மாணவர்களின் நீண்ட காலதேவையை கருத்தில் கொண்டு,கல்லூரி முதல்வரின் கோரிக்கையை ஏற்று, கலையரங்கம் கட்டும் பணி தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி தரம் உயரும்: கலையரங்கத்துக்கு குளிர் சாதன வசதி உள்ளிட்ட வசதிகளை கூடுதலாக செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இதற்காக ரூ.3.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலையரங்கத்தில் 1,000 மாணவர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்க முடியும்.
‘சி’ கிரேடில் இருக்கும் இக்கல்லூரி, இந்த கலையரங்கம் வந்தபிறகு ‘ஏ’ கிரேடாக தரம் உயரும். இங்கு புள்ளியியல், பொது நிர்வாகம், வணிகவியல் நிதி மேலாண்மை ஆகிய 3 பாடப் பிரிவுகளை புதிதாக கொண்டுவர வேண்டும் என்று பேராசிரியர்கள் கடந்த ஆண்டு கோரிக்கை வைத்தனர். அதுகுறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், கல்லூரி முதல்வர் ஆர்.ஜெயச்சந்திரன், சென்னை மாநகராட்சி மண்டலக் குழு தலைவர்கள் கிருஷ்ண மூர்த்தி, துரைராஜ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஆல்வின் ஞானசேகரன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.