சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் வழக்கமான பருவகால தொற்றுதான். பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.
மழைக்காலம், குளிர்காலம் முடிந்த பிறகும், சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் பரவலாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகள், முதியவர்களிடம் உடல் வலி, தொண்டை வலி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இது என்ன வகை வைரஸ் என்பதை அறிவதற்காக, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது.
இன்ஃப்ளூயன்ஸா-ஏ தொற்று: பரிசோதனை முடிவில், இது கரோனா, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. அதே நேரம், இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை தொற்று 50 சதவீதம் பேருக்கு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. அடுத்த படியாக ஆர்எஸ்வி எனப்படும் நுரையீரல் வைரஸ் பாதிப்பு 37.5 சதவீதம் பேருக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.
ஒரு வாரத்துக்குள் குணமாகும்: இது குறித்து கேட்டபோது, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: சென்னையில் தற்போது பரவிவரும் வைரஸ் பாதிப்பு புதிதானதுஅல்ல. ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள 2 வைரஸ் தொற்றுகளும் பருவ காலத்தில் வழக்கமாக பரவக்கூடியதுதான். எனவே, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்.
இது ஒரு வாரத்துக்குள் குணமாகிவிடும். முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள், எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு தேவைப்பட்டால் ஓசல்டாமிவிர் எனப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்து கொடுக்கலாம். அரசு மருத்துவமனைகளில் அது போதிய அளவு கையிருப்பு உள்ளது. அடுத்த சில நாட்களுக்குள் வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.
முதியவர்கள், எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். சென்றாலும், முகக் கவசம் அணிவது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.