சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் 
தமிழகம்

தமிழகத்தில்தான் வெளி மாநிலத்தவர்கள் மிக மிக பாதுகாப்பாக இருக்கின்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செய்திப்பிரிவு

சென்னை: "தமிழக முதல்வரின் பிறந்தநாளையொட்டி வட மாநிலத் தலைவர்கள் வந்து பாராட்டியதைத் தாங்கிக்கொள்ள முடியாத பொறாமையில் சிலர், வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்த வீண் வதந்திகளை கட்டவிழ்த்து வருகின்றனர்" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "சமூக வலைதளங்களில், தேவையின்றி பதற்றத்தை ஏற்படுத்துகின்ற வகையில், ஊகங்களின் அடிப்படையில் செய்திகளை திரித்து வெளியிடுவது என்பது செய்யக்கூடாது ஒன்று. அதை தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் செய்யும் ஒருசில விரோதிகள் எப்போதுமே இருந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

அத்தகைய சூழலில்தான், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டில், ஏதோ பாதிப்பை ஏற்படுத்துவது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அப்படி அல்ல. தமிழ்நாட்டில் மட்டும்தான், வெளி மாநிலத்தவர்கள் மிக மிக பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில், வெளி மாநிலங்களைச் சேர்ந்த குறிப்பாக வட மாநிலத் தலைவர்களும் வந்து தமிழக முதல்வருக்கு அவரது பிறந்தநாள் தினத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதனை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் பொறாமையின் காரணமாக வீண் வதந்திகளைக் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அனைத்து தரப்பினருக்கும் ஒரு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்" என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT