திருச்சி: ராமஜெயம் வழக்கு விசாரணையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தமிழகத்தில் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொலை, ஆள் கடத்தல் போன்ற சம்பங்கள் குறைந்துள்ளன. சாதி,மதக் கலவரங்கள் இல்லை. சில குற்றங்கள் நடைபெற்றாலும், அவற்றில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து விடுகிறோம்.
காவல்துறையினருக்கு வாரம் ஒருநாள் விடுமுறை விட வேண்டும் என சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் முக்கிய விழாக்கள், பண்டிகை நாட்கள் போன்றவற்றின்போது தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் அவர்களுக்கு விடுமுறை அளிக்க முடிவதில்லை. இதுதவிர, மற்ற சமயங்களில் வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அதேபோல, வேங்கைவயல் வழக்கிலும் சிபிசிஐடி போலீஸார் உரிய முறையில் விசாரித்துக் கொண்டுள்ளனர் என்றார்.