தமிழகம்

திருச்சி | ‘இந்து தமிழ் திசை’, ‘வாக்கரூ’ சார்பில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்: ஆட்சியர் வழங்கினார்

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் ‘வாக்கரூ’ சார்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ‘நடந்தால் நன்மை நடக்கும்’ என்ற தலைப்பில், நடைபயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வண்ணம் தீட்டுதல் மற்றும் கட்டுரை போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. இதில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்றோருக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

ஆட்சியர் மா.பிரதீப் குமார் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சை.சற்குணன், இந்து தமிழ் திசை முதுநிலை விற்பனை அலுவலர்கள் டி.எஸ்.பாலாஜி, பி.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல் 3 பரிசு பெற்றவர்கள் விவரம்: வண்ணம் தீட்டுதல் போட்டியில் ரங்கம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவி  சஞ்சலின், பகவதிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி பி.கிருத்திகா, மாத்தூர் அரசு சிறப்பு மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.மது.

கட்டுரைப் போட்டி ஜூனியர் பிரிவில் தண்டலைப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்.சந்தியா, கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி மாணவி எஸ்.ரதிதேவி, திருச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் பி.ஜெஷ்வந்த்.

கட்டுரைப் போட்டி சீனியர் பிரிவில், காட்டூர் ஆதி திராவிடர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.பிரவீன், கே.கே.நகர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி டி.சந்தியா, எடமலைப்பட்டிபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்.தாமரை செல்வி.

          
SCROLL FOR NEXT