சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு எங்களுக்கு தோல்விகரமான வெற்றி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோடம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். "தொண்டர்கள், தலைவர்கள் என்று அனைவரும் ஒன்றிணைந்துதான் செயல்படுகிறோம். காமாலைக் காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல தான் அவர்களுக்குத் தெரிகிறது. எங்களின் கட்சி வேகமாக உள்ளது. எழுச்சியாக உள்ளது. வரும் காலங்களில் வீறுகொண்டு மகத்தான வெற்றியை பெறும் நிலையில் தான் கட்சி உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலைப் பார்த்து ஆளும் திமுக அரசு மிகப்பெரிய பயத்தில் இருந்தது. இதற்கு முன்பு எந்த தேர்தலிலும் இது போன்று அவர்கள் பயந்தது கிடையாது. 350 கோடி செலவு செய்து போலியான வெற்றியை திமுக பெற்றுள்ளது. 22 மாதங்களில் திமுக கொள்ளையடித்த பணத்தை ஈரோடு கிழக்கு தொகுதியில் செலவு செய்தனர். ஆளும் அரசின் பணம் பாதளம் வரை பாய்ந்துள்ளது.
அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்து வாக்காளர்களை அடைத்து வைத்து இந்த வெற்றியை பெற்றுள்ளனர். எங்களை பார்க்காமல் இருப்பதற்கு பணம் கொடுத்துள்ளனர். இதை எல்லாம் தாண்டி 45 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம். எங்களை பொறுத்த வரையில் இது தோல்விகரமான வெற்றி தான். நாங்கள் தான் உண்மையாக வெற்றி பெற்றுள்ளோம். இது திமுகவிற்கு வெற்றி கிடையாது.
இனி திருமங்கலம் பார்முலா கிடையாது. ஈரோடு கிழக்கு பார்முலா தான். எந்த கட்சியும் இது போன்று சிந்திக்கவில்லை. மக்களை அடைத்து வைக்கும் கட்சி திமுக தான். ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார்கள். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம். சசிகலா எங்களை விட்டுவிட்டு, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடட்டும்." இவ்வாறு அவர் கூறினார்.