ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதையடுத்து, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இதேபோல, கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் காரணம்: தேர்தல் முடிவுகள் குறித்து ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறும்போது, “இந்த வெற்றிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் முதல் காரணம். திமுக கொடுத்த 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதற்கு அங்கீகாரமாக வாக்காளர்கள் இந்த வெற்றியைத் தந்துள்ளனர். மேலும், வரும் மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக இந்த வெற்றி அமைந்துள்ளது” என்றார்.