மொரப்பூர் அடுத்த போடிநாயக்கனஅள்ளி கிராமத்தில் அனுமதியின்றி அம்பேத்கர் சிலை அமைக்கக் கூடாது எனக்கூறிய வட்டாட்சியர் பெருமாள் மற்றும் அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
தமிழகம்

மொரப்பூர் அருகே கிராமத்தில் அனுமதியின்றி அம்பேத்கர் சிலை அமைக்க முயற்சி: அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்

செய்திப்பிரிவு

அரூர்: மொரப்பூர் அருகே அனுமதியின்றி அம்பேத்கர் சிலை அமைக்க முயன்றதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகேயுள்ள தாசிரஅள்ளி ஊராட்சி போடி நாயக்கனஅள்ளி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பொது இடத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைக்க ஊர்மக்கள் முடிவு செய்து அதற்கான பீடமும் அமைத்தனர். சில தினங்களுக்கு முன்னர் சிலையும் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், அனுமதியின்றி சிலை அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அரூர் வட்டாட்சியர் பெருமாள் தலைமையில் வருவாய் மற்றும் காவல்துறையினர் போடி நாயக்கனஅள்ளிக்கு நேற்று வந்தனர். அனுமதியின்றி சிலை அமைக்கக் கூடாது என பொதுமக்களிடம் கூறினர்.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அரசின் விதிகளை சுட்டிகாட்டிய அதிகாரிகள் முறையாக அனுமதி பெற்று சிலை அமைக்குமாறு வலியுறுத்தினர். பின்னர் அம்பேத்கர் சிலை துணியால் சுற்றி பாதுகாப்பாக வைக்கப்பட்டது. தொடர்ந்து கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது குறித்து அரூர் வட்டாட்சியர் பெருமாள் கூறுகையில் , சிலை அமைக்க தற்போது அரசு கடும் விதிமுறைகளை விதித்துள்ளது. சிலை அமைக்க உரிய அனுமதி கோரி விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும். மேலும், எளிதில் சேதமாகும் சிமென்ட் , மண் சிலைகள் அமைக்க அனுமதியில்லை. வெண்கல சிலை அமைக்கவே அரசு அனுமதித்துள்ளது, இது குறித்து மக்களிடம் விளக்கி கூறப்பட்டது. அவர்களும் அதனை ஏற்று உரிய அனுமதி பெற்ற பின்னர் சிலை அமைத்துக்கொள்வதாக கூறினர், என்றார்.

SCROLL FOR NEXT