தமிழகம்

செங்கல்பட்டு | பத்மஸ்ரீ விருது பெறும் பாம்பு பிடிப்பவர்களுக்கு ஆளுநர் கவுரவம்

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியம், சென்னேரி பகுதியைச் சேர்ந்தவடிவேல் கோபால், மாசி சடையன் இருவரும் இருளர் இனத்தை சார்ந்த பாம்பு பிடிப்பவர்கள் ஆவர். இவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு பத்ம விருது அறிவித்தது.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இருவர் வீட்டுக்கும் நேரடியாக சென்று அவர்களுடன் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து அவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி சென்னேரி பகுதியில் நடைபெற்றது. பின்னர் தொடர்ந்து இருவருக்கும் சால்வை அணிவித்து நினைவு பரிசை ஆளுநர் வழங்கினார்.

அப்போது தமிழக ஆளுநர் பேசியதாவது: பாம்பு பிடிக்கும் தொழிலை மற்ற தொழில் போலவே ஒரு தொழிலாக பாவித்து அங்கீகாரம் வழங்க வேண்டும். உயிரைக் காக்கும் தொழிலை மேற்கொள்ளும் இருளர் பழங்குடியின மக்களுக்கு நன்றியை தெரிவிப்பதுடன் அவர்களுக்குரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். மருத்துவர்களுக்கு கிடைப்பது போல் அவர்களுக்கு இணையான அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

இத்தொழில் மேலும் நலிந்து விடாமல் நவீனத்துவம் பெற வேண்டும். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் இருளர் மக்கள் வறுமையில் வாடுவது வருத்தம் அளிக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்துக்கு மத்திய, மாநில அரசுகள் ஏனைய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பத்மஸ்ரீ பெறும் இருவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத், பயிற்சி ஆட்சியர் அபிலாஷா கவுர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் என பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT