தமிழகம்

சென்னை மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இது குறித்து நேற்றைய மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் நெகிழ்ச்சியுடன் பேசினர். இக்கூட்டத்தில் 844 நவீன பேருந்து நிழற்குடைகளை ரூ.18 கோடியில் அமைப்பது உள்ளிட்ட 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சி தேர்தல் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்றது. இதில் 153 இடங்களில் திமுக வென்று பெரும்பான்மைப் பெற்றது. வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கடந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டனர். அன்று நடைபெற்ற மேயர் தேர்தலில் ஆர்.பிரியாவும், துணை மேயர் தேர்தலில் மு.மகேஷ்குமாரும் வெற்றி பெற்று பொறுப்பேற்றுக்கொண்டனர். இவர்கள் அனைவரும் பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இந்நிலையில் மாநகராட்சி மன்றக் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. உறுப்பினர்கள் பலர், தாங்கள் இப்பொறுப்பில் ஓராண்டை நிறைவு செய்ததை மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் மன்றத்தில் பேசி பதிவு செய்தனர். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மாநகராட்சி சார்பில் கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரியுடன் 60 சதவீத மேல் வரி விதிக்கப்பட்டு வந்ததை ரத்து செய்தும், அரசு போக்குவரத்துக் கழகத்தின் 3 சொத்துகளுக்கு, கரோனா பேரிடர் காலத்தில் செலுத்தாத சொத்து வரிக்கு ரூ.5 லட்சத்து 24 ஆயிரம் தனி வட்டி விதித்திருந்ததை ரத்து செய்தும், புவிசார் தொழில்நுட்பம் மூலம் தனியார் கட்டிடங்களை அளவீடு செய்து சொத்து வரியை கணக்கிடும் பணிக்கான ஆணை வழங்க அனுமதி அளித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 379 சாலைகளை ரூ.45 கோடியில் சீரமைக்க பணி ஆணை வழங்குதல், ரூ.30 கோடியில் விக்டோரியா ஹாலை புனரமைக்க அனுமதி என மொத்தம் 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் பேசிய கணக்குக் குழு தலைவர் தனசேகரன், “சென்னையில் மொத்தம் 786 பூங்காக்கள் உள்ளன. இதில் முதல்வர் ஸ்டாலின் மேயராக இருக்கும்போது திறக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட பூங்காக்களை, அதிமுக ஆட்சியில் முறையாக பராமரிக்காமல் காழ்ப்புணர்ச்சியுடன் சீரழித்துள்ளனர்” என்றார்.

SCROLL FOR NEXT