திருப்பத்தூர்: திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டியலின ஜாதி சான்றிதழ் கேட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளில் 2 பேர் மயங்கி விழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழ் பழங்குடி குறவன் சங்கத்தைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் எஸ்.சி., ஜாதி சான்றிதழ் கேட்டு, கடந்த 27-ம் தேதி திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து, 4-வது நாளாக நேற்றும் போராட்டத்தை குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தி வருகின்றனர்.
நான்கு நாட்களாக பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, பெண்கள், தொழிலாளர்கள் என பலர் 4 நாட்களாக வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலேயே சமைத்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருவதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி தலைமையிலான அதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் முடிவுக்கு வந்தபாடில்லை. சான்றிதழ் பெற பல முறை போராட்டம் நடத்தும்போது எங்களை சமாதானம் செய்து அனுப்பும் வருவாய் துறையினர் அதன்பிறகு நாங்கள் கேட்கும் சான்றிதழை தருவதில்லை என்பதால் இந்த முறை எஸ்.சி., சான்றிதழ் பெறாமல் இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில், காத்திருப்பு போராட்டத்தின் 4-வது நாளான நேற்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் கண்களில் கருப்பு துணிக்கட்டிக் கொண்டு, வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து, எங்களின் கல்வி பாதிக்காமல் இருக்க எஸ்.சி., சான்றிதழ் வழங்க வேண்டும் எனக்கூறி முழக்கமிட்டனர்.
பிறகு, தவளைப்போல் தத்தி, தத்தி சென்று எங்களுக்கு எஸ்.சி., குறவர் சான்றிதழ் வழங்க வேண்டும் எனக்கூறி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது, இரு மாணவிகள் வெயிலின் தாக்கம் காரணமாக மயங்கி கீழே விழுந்தனர். இதைக்கண்டு அங்கிருந்தவர்கள், உடனடியாக அந்த மாணவிகளை அங்கிருந்து நிழலான இடத்துக்கு தூக்கிச் சென்று அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.
காத்திருப்பு போராட்டத்தின் 4-வது நாளான நேற்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் கண்களில் கருப்பு துணிக்கட்டி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.