சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலில் தனது மகன் பெற்ற வாக்குகளை விட இந்த இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு சதவீதம் 74.79.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மார்ச் 2) காலை 8 மணிக்கு தொடங்கியது. 15 சுற்றுகளின் முடிவுகளின் அடிப்படையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,922 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10,827 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,432 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்படி, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரத்து 234 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் தனது மகன் பெற்ற வாக்குகளை விட தற்போது ஈவிகேஎஸ் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் திருமகன் ஈவேரா 67,300 வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தார். தற்போது தனது மகனை விட 42 ஆயிரத்து 856 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார் ஈவிகேஎஸ்.
ஆனால் அதிமுக ஆயிரக்கணக்கான வாக்குகளை இழந்துள்ளது. கடந்த தேர்தலில் இந்த தொகுதி அதிமுக கூட்டணியில் தமாகாவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அவர் இரட்டை சின்னத்தில் தான் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அதிமுக 58,396 வாக்குகள் பெற்றது. இதை விட 9 ஆயிரத்து 974 வாக்குகள் குறைவாகதான் இந்த தேர்தலில் பெற்றுள்ளது.