மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2024ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கி 2028ம் ஆண்டில் முடிவடையும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கட்டண படுக்கை பிரிவுகள் தொடக்க விழா இன்று நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கட்டண மருத்துவ படுக்கைப் பிரிவை தொடங்கி வைத்தார். வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, திமுக எம்எல்ஏ கோ.தளபதி, ஆட்சியர் அனீஸ் சேகர், டீன் ரத்தின வேலு மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ''மதுரை, கோவை, சேலம் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண மருத்துவப் படுக்கை பிரிவு (பே வார்டு) வசதிகளை அமைப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு கடந்த பட்ஜெட்டில் வெளியிட்டது. அதன் அடிப்படையில் 15 நாட்களுக்கு முன் சேலத்தில் "பே வார்டு" வசதி தொடங்கி வைக்கப்பட்டது.
தொடர்ச்சியாக இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் "பே வார்டு" வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ சிகிச்சைப் பிரிவில் குளிர் சாதன வாசதி, தனி கழிப்பறை, டிவி, தண்ணீர் கொதிக்கலன் வசதி, உதவியாளர் வசதி என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தனி அறை ஒன்றுக்கு ரூ.1200 கட்டணமும், சொகுசு அறைக்கு ரூ.2 ஆயிரம் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற தனி அறைகள் கொண்ட "பே வார்டு" வசதி சென்னை ராஜீவ் காந்தி மருத்தவமனையில் மட்டும் இருந்தது. சென்னையில் உள்ள இந்த வசதிகளை மற்ற நகரங்களுக்கும் கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் சேலம், மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவிலே மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அறுவை சிகிச்சை செய்வதில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மை இடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளது. இதற்கான மருத்துவப்பிரிவு 2021ம் ஆண்டு ஜூலையில் தொடங்கி வைக்கப்பட்டது. முன்பு இதற்கான அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு மும்பை அல்லது தாய்லாந்துக்கு செல்வார்கள். தற்போது அந்த நிலை மாறி இருக்கிறது. மதுரை அரசு மருத்துவமனையிலே 232 பேருக்கு இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 106 பேர் திருநங்கைகள், 125 பேர் திருநம்பிகள் அடங்குவர். அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு 180 பேருக்கு மருத்துவச் சான்றுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கருத்தரிப்பு மையங்களை கொண்டு வர முடிவெடுக்கப்பட்டு அதற்கான முயற்சிகள் நடக்கின்றன. மதுரை, சென்னை எழும்பூர் ஆகிய இரண்டு இடங்களில் செயற்கை கருத்தரிப்பு மையங்களை கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.2 1/2 கோடி மதிப்பில் கருத்தரிப்பு மையம் அமைப்பதற்காக உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணி நடக்கிறது. துணை சுகாதார நிலையங்கள் ஏராளமானவை வாடகை கட்டிடங்களில் செயல்படுகின்றன. அதனால், சொந்த கட்டிடங்கள் கட்டி அங்கு துணை சுகாதார நிலையங்களை மாற்றுவதற்கான பணிகள் நடக்கின்றன.
அந்த வகையில் மதுரையில் 5 கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்கள் தரமான சிகிச்சை பெற மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரையில் நானும், துறை செயலாளரும் ஜப்பான் நாட்டிற்கு சென்று ஜைக்கா நிறுவனத்தின் துணை தலைவருடன் பேசினோம்.
மதுரை எய்ம்ஸ்-க்கு அடிக்கல் நாட்டும்போது இந்தியாவில் பிற மாநிலங்களில் 7, 8 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு சேர்த்து அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது அடிக்கல் நாட்டப்பட்ட மற்ற மருத்துவமனைகளுக்கு மத்திய அரசின் நிதி ஆதாரத்தில் அந்த மருத்துவமனைகள் அமையும் என்று அறிவித்தார்கள். ஆனால், மதுரையில் மட்டும் ஜைக்கா நிதியுதவியுடன் கட்டப்படும் என அறிவித்தார்கள்.
ஜைக்கா நிதியுதவி பெறுவதற்கு, தொடர்ச்சியான ஆய்வுகள், அவர்களுடனான தொடர்புகள், முயற்சிகள் இருக்க வேண்டும். அப்படி தான் ஜைக்கா நிறுவனத்தின் உதவியுடன் தமிழக அரசு, தமிழகத்தில் பல்வேறு மருத்துவமனைகளை கட்டி வருகிறது. அதற்கெல்லாம் ஜைக்கா நிறுவனம் முறையாக நிதி வழங்கி கொண்டிருக்கிறது.
மதுரை "எய்ம்ஸ்" பொறுத்தவரையில் மத்திய அரசு தமிழக அரசு போன்ற தொடர் ஆய்வுகளும், முயற்சிகளும் மேற்கொள்ளப்படாத காரணத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமலே உள்ளது. நாங்கள் ஜப்பான் செல்லும் போதெல்லாம், மத்திய அரசு அமைச்சருடன் 8, 9 முறை மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் தொடங்கிட கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.
"கன்சல்டன்சி" டெண்டர் ஒன்று ஏப்ரலில் நடைபெற இருக்கிறது. இது முடிந்த பிறகு கட்டுமானப் பணிக்கான டெண்டர் விடப்படும். இந்த டெண்டர் டிசம்பரில் முடிந்து விடும். 2024 டிசம்பரில்தான் கட்டுமான பணிகள் தொடங்கும் என உறுதியாக தெரிகிறது. இந்த கட்டிடம் கட்டி முடிப்பதற்கு குறைந்தப் பட்சம் 4 ஆண்டுகள் எடுத்துக் கொண்டாலும், 2028ம் ஆண்டு டிசம்பரில்தான் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முடிவடையும்.
முதல்வர் ஸ்டாலின் எப்போதெல்லாம் பிரதமரையும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரையும் சந்திக்கிறாரோ, அப்போதெல்லாம் மதுரை ‘எய்ம்ஸ்’ பற்றிய கருத்துகளை வலியுறுத்துகிறார்'' இவ்வாறு சுப்ரமணியன் தெரிவித்தார்.