ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்கள், 25 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர். இடைத்தேர்தலில், 82 ஆயிரத்து 138 ஆண் வாக்காளர்களும், 88 ஆயிரத்து 37 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு சதவீதம் 74.79.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மார்ச் 2)காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது மொத்தம் 16 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதன்படி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 17,417 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 5598 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி 585 வாக்குகளும், தேமுதிக 17 வாக்குகளும் பெற்றுள்ள. இதன்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.