சென்னை: மாண்டலின் மேதை யூ.ஸ்ரீனிவாஸின் பிறந்த நாளையொட்டி `மாண்டலின் ஸ்ரீனிவாஸ் நினைவு விருது 'கர்னாடக இசைப் பாடகர்கள் ரஞ்சனி - காயத்ரிக்கும், மிருதங்கவித்வான் திருவாரூர் பக்தவத்சலத்துக்கும் மியூசிக் அகாடமியில் நேற்று வழங்கப்பட்டது.
எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் ஒருங்கிணைத்த இந்தநிகழ்வில் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் நினைவு விருதையும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் இசைக் கலைஞர்களுக்கு சவுத் இண்டியன் வங்கி நிர்வாக இயக்குநர் முரளி ராமகிருஷ்ணன் வழங்கி கவுரவித்தார்.
முன்னதாக மாண்டலின் ஸ்ரீனிவாஸின் மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ரஞ்சனி - காயத்ரியின் கர்னாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ‘சங்கீதபால பாஸ்கரா' விருதை இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கையால் பெற்று பாராட்டப்பட்டவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ். இதை நினைவுகூரும் வகையில் `சங்கீத பாஸ்கரா' என்னும் பாடலைஇயற்றி ராகம் தானம் பல்லவியாக ரஞ்சனி - காயத்ரி பாடியது நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.
``ஒவ்வோர் ஆண்டும் 2 கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு யூ.ஸ்ரீனிவாஸ் நினைவு விருது வழங்கப்படுகிறது. விக்கு விநாயக்ராம், ஹர்மித்மன் சேட்டா, டி.எம்.கிருஷ்ணா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், அம்ஜத் அலிகான், சிவமணி, அருணா சாய்ராம், பிர்ஜு மகராஜ், ஹரிஹரன், லூயிஸ்பாங்க் ஆகியோரைத் தொடர்ந்து 9-வது ஆண்டாக மாண்டலின் ஸ்ரீனிவாஸ் நினைவு விருதை ரஞ்சனி - காயத்ரியும், மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலமும் பெறுகின்றனர்.
மாண்டலின் னிவாஸின் குடும்பத்தினர், கலைஞர்கள், ரசிகர்கள் ஆகியோரின் அன்பும் ஒத்துழைப்பும்தான் இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் வெகு சிறப்பாக அமைவதற்குக் காரணம்'' என்றார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் இயக்குநர்களில் ஒருவரான இளங்கோ குமணன்.