தமிழகம்

வறண்டது மூல வைகை: க.மயிலாடும்பாறை மலை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

என்.கணேஷ்ராஜ்

கடமலைக்குண்டு: க.மயிலாடும்பாறை ஒன்றிய மலை கிராமங்களின் குடிநீர் தேவை மூல வைகையின் உறைகிணறுகள் மூலமே பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது மூலவைகை வறண்டுள்ளதால் இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் கூடம்பாறை, அரசரடி, அஞ்சரபுலி, வெள்ளிமலை, புலிகாட்டு ஓடை, இந்திரா நகர், பொம்மு ராஜபுரம், காந்திக்கிராமம், வாலிப்பாறை, தும்மக்குண்டு உள்ளிட்ட ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மலைத் தொடர்களில் பெய்யும் மழைநீர் சிற்றாறுகளாக பெருகி மூல வைகையாக உருவெடுக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் மூலவைகையில் நீர்வரத்து இருந்தது. தற்போது சில வாரங்களாக மழைப்பொழிவு இல்லாததால், மூலவைகை முற்றிலும் வறண்டு விட்டது. கடமலை மயிலாடும்பாறை ஒன்றியத்தை பொறுத்தளவில் ஆத்தங்கரைப்பட்டி, துரைச்சாமிபுரம், எட்டப்பராஜபுரம், கண்டமனூர், கடமலைக்குண்டு, குமணந்தொழு, மந்திச்சுனை, முருக்கோடை, நரியூத்து, பாலூத்து உள்ளிட்ட 18 கிராம ஊராட்சிகள் உள்ளன.

இதில் மேகமலையை தவிர்த்து 17 கிராம ஊராட்சிகளின் குடிநீர் தேவை மூல வைகை மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்காக ஆற்றில் ஏராளமான உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து பெறப்படும் நீர் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் உறைகிணறுகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

இதே நிலை நீடித்தால் இப்பகுதி மலைகிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இக்கிராம மக்கள் கூறுகையில், மூலவைகையில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருப்பதில்லை. மழை நேரங்களில் மட்டுமே நீரோட்டம் இருக்கும். இதனால் ஆண்டின் பல மாதங்கள் ஊராட்சிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஆகவே, ஆங்காங்கே தடுப்பணை அமைத்து நீரைத்தேக்கி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT