தமிழகம்

நாமக்கல் | லாரி மீது கார் மோதி தாய், மகள் உட்பட 5 பெண்கள் உயிரிழப்பு: 2 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

செய்திப்பிரிவு

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் தாய், மகள் உட்பட 5 பெண்கள் பரிதாபமாக உயிழந்தனர். படுகாயமடைந்த 4 வயது சிறுமி மற்றும் கார் ஓட்டுநர்நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளர் ரவி (45). இவர் தனது மனைவி கவிதா (43) மற்றும் கவிதாவின் தம்பி உதயக்குமாரின் மகள் லக் ஷனா (4) ஆகியோருடன் சென்னையில் இருந்து காரில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட மோர்பாளையம் வட்டூரில் உள்ள மாமியார் ஏ. கந்தாயி (60) வீட்டுக்கு வந்துள்ளார்.

கோயில் திருவிழா: இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் மனைவி கவிதா, மாமியார் கந்தாயி, குழந்தை லக் ஷனா ஆகியோருடன் கரூர் மாவட்டம் வீரப்பூரில் உள்ள பொன்னர் சங்கர் கோயில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். இவர்களுடன் உறவினர்களான அதே பகுதியைச் சேர்ந்த கே. குஞ்சம்மாள் (65), காங்கேயம்பாளையத்தை சேர்ந்த பி. சாந்தி (35), கருமாபுரத்தைச் சேர்ந்த எம். சுதா (எ) மகாலட்சுமி (36) ஆகியோரும் சென்றுள்ளனர்.

மூன்று தினங்கள் அங்கேயே தங்கியிருந்துள்ளனர். பின், நேற்று முன்தினம் இரவு வீரப்பூரில் இருந்து காரில் திருச்செங்கோடு புறப்பட்டுள்ளனர். காரை ரவி ஓட்டி வந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகம் அருகே வந்தபோது சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் கார் அதிவேகமாக மோதி கோர விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் கந்தாயி அவரது மகள் கவிதா, குஞ்சம்மாள்மற்றும் மகாலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த சாந்தி, கார் ஓட்டுநர் ரவி, சிறுமி லக் ஷனா ஆகியோர் உடனடியாக மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டனர்.

எனினும், மருத்துவமனை செல்லும் வழியில் சாந்தி உயிரிழந்தார். ரவி, லக் ஷனாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் எஸ்பி. ச. கலைச்செல்வன் நேரில் ஆய்வு செய்தார்.

விபத்து குறித்து பரமத்தி வேலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் தாய், மகள் மற்றும் உறவினர்கள் என 5 பெண்கள் ஒரே சமயத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT