சேலம்: சேலம் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக மாமன்ற கூட்டத்தில், அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
சேலம் மாநகராட்சி மாமன்ற இயல்புக் கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், எம்எல்ஏ ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி, சேலம் மாநகராட்சி சார்பில் வாழ்த்துகள் தெரிவித்தும், அவரது பணிகள் சிறக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் வார்டு பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டதற்கான ஆணை வெளியிடப்பட்டது. ஆனால், அதற்கான நிதி விடுவிக்க வில்லை.15-வது நிதிக் குழு அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு ஒதுக்க வேண்டிய நிதியை நிதிக்குழு இதுவரை ஒதுக்கவில்லை. அதற்கு முன்பாகவே மாமன்றத்தின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு செய்தது எப்படி என அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதனால், அதிமுக, திமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் பதிலளித்து பேசும்போது, ‘15-வது நிதிக் குழு ஒதுக்கிய தொகையை இன்னும் சில நாட்களில் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நிதி கிடைத்தவுடன், வார்டு வளர்ச்சிப் பணிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.
ஒவ்வொரு வார்டுக்கும் உரிய எல்லைப்பகுதி இன்னும் நிர்ணயிக்கப்படாததால் கவுன்சிலர்களிடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், உரிய எல்லையை மாநகராட்சி வகுத்து, அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதிமுக கவுன்சிலர்கள் பேசும்போது, நிதி ஒதுக்குவதில் மாநகராட்சி நிர்வாகம் பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது, என குற்றம்சாட்டினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன்சிலர்கள், சேலம் மாநகராட்சி மேயர் பொதுவாக செயல்படுகிறார். அவர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறுவது சரியல்ல. அனைத்து வார்டுகளுக்கும் மேயர் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார், என்றனர். மேயர் ராமச்சந்திரன் பேசும்போது, ‘முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், அனைத்து கவுன்சிலர்களுக்கும் பாரபட்சமில்லாமல் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்நிலை, இனிவரும் காலங்களிலும் தொடரும்,’ என்றார்.
சீர் மிகு நகர திட்டத்தின் கீழ் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு மேம்பாலத்துக்கு மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.