சென்னை: செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் ‘வாக்கரூ’ இணைந்து பள்ளிமாணவர்களுக்காக நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
நடைப்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தைக் குழந்தைகளிடம் விளக்கி அவர்களை தினமும் நடக்கப் பழக்கப்படுத்தும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் வாக்கரூ இணைந்து ‘நடந்தால் நன்மையே நடக்கும்’ எனும் விழிப்புணர்வைத் தூண்டும் போட்டிகளை நடத்துகின்றன.
இப்போட்டிகளில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 3,4,5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும்போட்டி, 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஜூனியர் கட்டுரைப் போட்டியாக “நடைப் பயிற்சியின் நன்மைகள்’ எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.
மேலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சீனியர் கட்டுரைப் போட்டியாக “நம்வாழ்க்கை முறைகளில் நடையின் பங்கும் பயனும்’ எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வெற்றி பெற்ற 9 மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஆட்சியர் ராகுல் நாத் தலைமை வகித்து வெற்றி பெற்ற 9 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினார்.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 9 பேருக்கு பரிசளிக்கும் விழா ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர் 9 பேருக்கு ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சான்றிதழ், பரிசுகளை வழங்கினார். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் உடன் இருந்தார்.