சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில்நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், சமீபத்தில் உடல்நல பாதிப்பால் இறந்த122-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஷீபா வாசுவின் மறைவுக்கு மவுனஅஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர்இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஷீபா வாசுவுடன் பணியாற்றியஅனுபவம் குறித்து பலரும் பேசினர்.
இரங்கல் தீர்மானத்தின் போது பேசிய 42-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் ரேணுகா, ``சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவர்களது பணிக்காலத்தில் இறந்தால் அவரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. ஆனால், மாமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும் இல்லை. எனவே வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
இதற்கு மேயர் பிரியா, ``மாமன்றஉறுப்பினர்கள் பதவியில் இருக்கும்போது இறந்தால் மாநகராட்சி சார்பில் அவரது குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்'' என்றார். அதைத்தொடர்ந்து பேசிய துணை மேயர் மகேஷ் குமார், ``இந்த தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அரசின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து மேயர் பிரியா, ``துணைமேயர் தெரிவித்துள்ளது குறித்து முதல்வரின் சிறப்பு கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்'' என உறுதியளித்தார்.
இதையடுத்து மாமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதால், திமுக கவுன்சிலர்கள் அதில் பங்கேற்க வசதியாக நாளை(மார்ச் 2) மாமன்றக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த ஜன.30-ம் தேதி நடந்த மான்றக் கூட்டத்தின்போது மதிமுக உறுப்பினர் ஜீவன், மாமன்ற கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து வழக்கமாக திருக்குறளுடன் தொடங்கும் மாமன்றக் கூட்டம் நேற்று முதல்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.